வறுமை ஒழிப்பில் குஜராத்தை விட தமிழகம் முன்னணி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.

Published Date: January 24, 2023

CATEGORY: CONSTITUENCY

வறுமை ஒழிப்பில் குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என அமைச்சர் பழனியில் தியாகராஜன் திங்கள்கிழமை பேசினார்.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்குள்பட்ட திரு.வி.க.,  ஈ.வே.ரா.நாகம்மையார், மாசாத்தியார் மேல்நிலைப் பள்ளிகள், சுந்தரராஜபுரம் உயர்நிலைப்பள்ளி, கம்பர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் எச்டிஎப்சி வங்கியின் நிதி உதவியுடன் திறன்மிகு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்தார். மேலும், இதர நான்கு பள்ளிகளின் திறன்மிகு வகுப்பறைகளையும் காணொளி வாயிலாக திறந்து வைத்துஅமைச்சர் பேசியதாவது:

திராவிடக் கொள்கையின் முக்கியமான அம்சமே கல்விதான். திராவிட கொள்கையின் அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது. சாமானியருக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் கல்வி சமூக மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும்.

கல்வி கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அரசு பள்ளிகளைத் தேடி வரும் நிலையில் அவர்களுக்கு இலவச கல்வியை கொடுப்பதுதான் அரசாங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது. தமிழகத்தில் 80 சதவீதம் பெண்கள் கல்வி பெற்றுள்ளனர். குஜராத்தை ஒப்பிடும்போது வறுமை ஒழிப்பிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மேயர் வ.இந்திராணி, மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் தசி.நாகராஜன்,  கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், மண்டலத் தலைவர்கள், சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகவேந்திரன், எச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் சசிதர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றன.

 

 

Media: Dinamani